மாலை ஐந்தரை மணி. முதலில் பியர் லெக்ராமின் கார்டில்லாக்... பிறகு மூன்று பெழோ. இறுதியில் வோஹ்ராவின் முன்பக்கத் திலிருக்கும் மட்கார்ட் சப்பிப்போன நிலையில் காணப்படும் பழைய ஸ்டாண்டர்ட்...
கார்கள் ஒவ்வொன்றாகப் போய் முடித்தவுடன், ஸ்கூட்டர்கள். காரும் ஸ்கூட்டரும் இல்லாதவர்கள் ஆகியோரின் முறை... சிவந்த செங்கல்லால் கட்டப்பட்ட உயரமான மதில்களுக்கு நடுவிலிருக்கும் நுழைவு வாயிலின் வழியாக அவர்கள் வெளியேறினார்கள்.
பகல் உறக்கம் முடிந்து கண்விழித்த சாலை ஓசை நிறைந்து காணப்பட்டது. வாகனங்கள் ஒன்றோடொன்று
உரசுவதைப்போல பாய்ந்தோடிக் கொண்டிருந்தன. பேருந்தின் இடப்பக்கத்தில் பயணிகள் அட்டைகளைப் போல தொங்கிக் கொண்டிருந்தனர். சைக்கிள் பாதை கரையை மீறி நடைபாதைக்கு வந்திருந்தது.
பேருந்து நிறுத்தத்தில் வரிசைகள் ஒவ்வொரு நிமிடமும் நீண்டுகொண்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் ஒன்றோடொன்று பிணைந்துகிடந்தன. நடக்கும்போது பிரிந்துவிடுமோ என்று தோன்றக்கூடிய குறுகலான ஸல்வாரையும் கம்மீஸையும் அணிந்திருக்கும் இளம்பெண்கள், பலவிதமான வேலைப்பாடுகள் கொண்ட "மியாம்மி ஃபோல்' புடவை அணிந்திருக்கும் பெண்கள், உரோம கோட் மற்றும் மேலாடை அணிந்த இளைஞர்கள்... பேருந்து நிறுத்தம் பல வண்ணங்களாலும் நிறைந்திருந்தது.
குளிர்காலம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. புலர்காலை வேளையிலும் மாலையிலும் உண்டாகக் கூடிய குளிர்ச்சி சுகமானது. ஏர்கண்டிஷனரிலிருந்து வரக்கூடியதைப்போன்ற குளிர்ச்சி... ஆனால், இளைஞர் களுக்கு... அவசரம்... அவர்கள் கம்பளியாலான கால்சட்டைகளையும் முழுமையாக மூடக்கூடிய மேலாடைகளையும் எடுத்து அணிய ஆரம்பித்தார்கள்- இப்போதே. ஒன்பதாம் எண் பேருந்து நிறுத்தம்- அது சற்று தூரத்தில் இருந்தது. மற்றவற்றிலிருந்து அது தனியாக இருந்தது. வரிசை இல்லை. பல வண்ணங்களில்லை. வாயைத் திறக்கும்போது வெங்காயத்தின் வாசனையை வெளியேற்றுபவர்கள்... பின்பக்கம் இல்லாத மேலாடை அணிந்த, தொப்புளுக்குக் கீழே பாவாடையைத் தாழ்த்தி அணிந்திருக்கும் கிராமத்துப் பெண்கள்...
அரவானிகள்... நாளைக்குத் தேவைப்படும் "சப்ஜி'யை வாங்கியவாறு அலுவலகத்திலிருந்து திரும்பிவரும் தரித்திர நாராயணர்களான வெள்ளைக் காலர் தொழிலாளிகள்... க்ரீன் காலனிக்குச் செல்லும் ஒன்பதாம் எண் பேருந்து...
இரண்டு ஒன்பதாம் எண் வந்தன. ஒன்றுக்குப் பின்னர் இன்னொன்றாக... எனினும், கூட்டம் குறையவில்லை. அதிகமாகத்தான் இருந்தது.
தூரத்திலிருந்த வாடகைக்கார் நிறுத்தத்தை நோக்கி நடந்தான். அங்கும் ஆரவாரம்...
""எங்கு?''
""க்ரீன் கா...''
முழுவதையும் கேட்பதற்குமுன்பே முகத்தைத் திருப்பிக் கொண்டான் காதில் விழாததைப்போல.
இலைகள் உதிர்ந்த வேப்பமரத்திற்குக் கீழே பழமையான நிறம் மங்கிய ஒரு வாடகைக் கார் கிடந்தது. கேள்வியும் பதிலும் உண்டாகவில்லை. கதவைத் திறந்துவிட்டான். அதிர்ஷ்டம்!
மரத்திற்குக் கீழேயிருந்து வாடகைக் கார் சற்று நகர்வதற்கு ஐந்து நிமிடங்கள் தேவைப்பட்டன. முனகலுடன் நடைபாதையையும் மிதிவண்டிப் பாதையையும் கடந்து, விசாலமான சாலையில் சென்றது.
பகல் வேளையில் பொய்யான இருட்டையும், இரவு வேளையில் வெளிச்சத்தையும் உண்டாக்கும் நாகரிகமான ரெஸ்ட்டாரென்ட்கள்... மிகவும் அழகுபடைத்த விற்பனை செய்யும் இளம்பெண்களை வெளிக்காட்டும் பெரிய பல்பொருள் அங்காடிகள், கண்ணாடிக்கதவுகளைக் கொண்ட மதுக்கடைகள்...
"நேச்சுரல் கார்டன்'ஸில் நாவல் மரங்களுக்குமேலே கிளிகள் ஆரவாரத்தை நிறுத்தின. அவை பழைய மன்னர்களின் கல்லறைகளில் கட்டிய கூடுகளுக்குத் திரும்பிச் சென்றன. சாயங்காலப் பொழுதை அனுபவிப் பதற்காக வந்திருக்கும் வயதானவர்களும் குழந்தைகளும் ஆரவாரம் உண்டாக்க ஆரம்பித்தார்கள்- அதற்கு பதிலாக...
நியான் விளம்பரங்கள் பிரகாசிக்க ஆரம்பித்தன. "கொலம்பியா'வில் "தி யங் ஒன்ஸ் ஸெஷன்' ஆரம்பிக்கப் போகிறது. மெல்லிய குழு இசைத் தெருவில் சிதறி விழுந்துகொண்டிருந்தது. நியான் வெளிச்சத்தில் நனைந்த சாலையில் ஊர் சுற்றித்திரியும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வந்தது.
வாடகைக் கார் நகரத்தின் ஒட்டுமொத்த அசிங்கங்களையும் கடந்து ஓடிக்கொண்டிருக்கும் சவுத்ரி நகரின் சாக்கடைக்குமேலே இருக்கும் பாலத்தை தாண்டியது.
"ஃப்ரென்ட் இன் நீட்' சிட்ஃபண்ட், "பிஸ்வஜித் அண்ட் ஸன்ஸ்' ஆகியவற்றின் அலுவலகங்களுக்கு மத்தியில் வாடகைக் கார் ஒரு சந்துக்குள் திரும்பியது. ஒரு சாதாரண சந்து. இரு பக்கங்களிலும் சாக்கடைகள்... அவற்றையொட்டி ஒன்றின்மீது ஒன்றாகக் கட்டப்பட்ட, மிகவும் நெருக்கமாக நின்றுகொண்டிருக்கும் கட்டடங்கள்... ஃபேஷன் பரேடும் ட்விஸ்ட்டும் நடக்கும், ஹாம்பர்கரும் எஸ்ப்ரஸ்ஸோவும் விற்பனை செய்யப்படும் ரெஸ்ட்டாரென்ட்களின் பின்பகுதி பார்க்கப்பட வேண்டியது.
நகரத்தின் இன்னொரு முகம்...
வளைந்து செல்லும், பூமியின் வெடிப்புகளை நினைவுபடுத்தக்கூடிய சந்தின் வழியாக வாடகைக் கார் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று "ப்ரேக்' போட்டான்.
தெருவையொட்டி நின்றுகொண்டிருக்கும் ஒரு பள்ளிவாசல். தரையில் விரிக்கப்பட்டிருந்த புல்லாலான பாயில் வரிசையாக நின்று மேற்கு நோக்கித் தொழுது கொண்டிருந்தார்கள். வெண்ணிற ஆடைகள்.. வெண்ணிறத் தொப்பிகள்... மீசையை மழித்து நீக்கிவிட்டு, அதே நேரத்தில்- தாடியை வளர்த்துக்கொண்டு... அதனால், அவர்களின் முகத்தில் ஒரு பயங்கரத்தன்மையின் நிழல்கள் விழுந்துகிடந்தன.
ஓட்டுநர் வெளியே இறங்கினான். காரின்மீது சாய்ந்து நின்றவாறு ஒரு "ரெட்லேம்ப்'பைப் பற்றவைத்துப் புகைக்க ஆரம்பித்தான்.
ஐந்து நிமிடங்களில் தொழுகை முடிந்தது. புல்லாலான பாயை தரையிலிருந்து நீக்கினார்கள். தொப்பி அணிந்திருந்தவர்கள் பல வழிகளை நோக்கிப் பிரிந்தார்கள். வாடகைக் கார் முன்னோக்கி நீங்கியது.
தெருவில் போடப்பட்டிருந்த பிரம்புக்கட்டிலில் கூட்டமாக அரவானிகள்... தமாஷாகப் பேசிக்கொண்டும், செண்டைகளின் ஓசையை எழுப்பிக்கொண்டும் இருந்தார்கள்.
சாக்கடைக்கு அருகில் வயதானவர்களும் குழந்தை களும் வரிசையாக அமர்ந்து மலம் கழித்துக் கொண்டிருந்தார்கள்.
வாடகைக்காரின் ஓட்டுநர் பின்னிருக்கையில் கண்களை மூடியவாறு சாய்ந்து அமர்ந்திருந்த மனிதனைத் திரும்பிப் பார்த்தான். எரிச்சலுடனும் வெறுப்புடனும்...
அழகான வீடும் உஷாவும் பாபுவும் பேபியும்... எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் நேரத்தைச் செலவிடுவதற்குப் பயன்படக்கூடிய க்ளப்... அதை யெல்லாம் ஒதுக்கிவிட்டு, இந்த வெறுப்பை அளிக்கக்கூடிய உலகத்திற்கு எதற்காக வருகிறோம்? அந்த கேள்விக்கு முக்கியத்துவம் தராமல் இருப்பதற்கு எளிதில் முடிந்தது. இது முதல்முறை இல்லையே! ஒரு "கூல்' சிகரெட்டிற்கு நெருப்பு பற்றவைத்து, புகையை ஊதினான்.
இது ஒரு செயல்.
நூற்றுக்கணக்கான வருடங்கள் பழமையைக்கொண்டு, சிதிலமடைந்த கட்டடங்கள்... சிலவற்றிற்கு மேற்கூரை இல்லை. சிலவற்றிற்கு சுவர்கள்கூட! அவற்றிலும் மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
கூட்டமாகப் பன்றிகள்... சாக்கடையின் அசிங்கங்களில் மூழ்கிவிட்டு திரும்பிவந்துகொண்டிருக்கின்றன. வாடகைக் காரின் வேகத்தைக் குறைத்து, தொடர்ந்து "ஹார்ன்' அடித்து, பத்மவியூகத்தை மீறினான்.
புகைக் கூட்டங்கள்... நான்கு பக்கங்களிலும் வேகவைக்கப்பட்ட சிவந்த செங்கற்கள் அடுக்கிவைக்கப் பட்டிருக்கின்றன. செங்கல் பணி செய்பவர்களின் காலனி... செங்கற்களின் உலகம்...
சந்துகளைக் கடந்து சற்று அகலமான தெருவுக்குள் வாடகைக் கார் நுழைந்தது. வீங்கிய ஒரு பேருந்து கடந்து சென்றது. ஒன்பதாம் எண்... க்ரீன் காலனிக்கு வந்துசேர்ந்திருக்கிறது. இறுதியில் புதிதாகக் கட்டப்பட்ட சிறிய சிறிய வீடுகள். வளர்ச்சி அடைந்திராத மரங்களின் வரிசை கொண்ட, தார் போடப்படாத தெரு. கோக்கோ கோலாவும் சிகரெட்டும் விற்பனை செய்யப்படும் ஒன்றிரண்டு கடைகள்... க்ரீன் காலனி ஒரு புதிய காலனி...
பி 113 என்ற எண் கொண்ட ஃப்ளாட்டிற்கு முன்னால் வாடகைக் கார் நிறுத்தப்பட்டது. மூன்று ரூபாய், நாற்பது பைசா. நான்கு ரூபாய்களைக் கொடுத்தான்.
அறுபது பைசா அன்பளிப்பு. வாடகைக் கார் ஓட்டுநரின் முகம் பிரகாசமானது. ஒரு "சல்யூட்' அளித்தான். நன்றியை வெளிப்படுத்தும் வகையில்...
வெளியே ஒரு வெஸ்பா. சந்தேகம் தோன்றியது. யாராவது உள்ளே இருந்தால்... விளக்கு கம்பத்திற்குக் கீழே சந்தேகத்துடன் நின்றான்- சிறிது நேரம்.
வெஸ்பாக்காரன் வெளியே வந்தான். தரைத்தளத் திலிருந்து நிம்மதி உண்டானது.
படிகளுக்கான வாசல் திறந்து வைக்கப்பட்டிருந்தது. மெதுவாக வளைந்து, திருப்பிச்செல்லும் படிகளில் ஏறி மேலே சென்றான். கதவில் இணைக்கப்பட்டிருந்த அழைப்பு மணி வினோதமானது. மெதுவாக சற்று திரும்பினால்... உள்ளே இசை ஒலிக்கும். வெளிநாட்டுப் பணியிலிருந்த- பெயர் நினைவில் இல்லாத ஒரு மனிதரின் அன்பளிப்பு அது. அதுமட்டுமல்ல; கடிகாரத் திலிருந்து சாம்பல் கிண்ணம்வரை அனைத்துமே அன்பளிப்புகள்தான்.
இசை முழங்கியது. ஒரு பையன் கதவைத் திறந்தான்.
""பைட்டியே ஸாப்.''
சுத்தமான குஷன் போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலிகளை அவன் சுட்டிக்காட்டினான்.
தலையைப் பின்னோக்கி சாய்த்து வைத்தவாறு சந்தோஷமான ஒரு சூழலில் அமர்ந்தான். பையன் மின்விசிறியைப் போட்டான். மெல்லிய குளிர்ச்சியான காற்று... கண்கள் மூடின.
பாத ஓசை... கண்களைத் திறந்து பார்த்தான். ப்ரவுன் நிற டெரிலின் புடவை... ரோஸ் நிறத்திலிருந்த லிப்ஸ்ட்டிக் உதட்டில். லிப்ஸ்ட்டிக்கை வைத்து ஒரு பொட்டு- நெற்றியில்.
பேச முடியவில்லையென்றாலும், கூறினான். ""சார்மிங்.''
""நன்றி.''
மிகவும் அருகிலிருந்த பிரம்பு நாற்காலியில் வந்து அமர்ந்தாள். மூச்சை அடைக்கச் செய்யும் ஃப்ரெஞ்ச் பெர்ஃப்யூமின் நறுமணம்... அவள் பயன்படுத்தும் "எஸ்பாஸி'ன் வாசனையில் ஒரு சிறப்புத் தன்மை இருக்கிறது. அந்த நறுமணத்தைப் பரப்புவளைத் தின்பதற்குத் தோன்றும்.
""உடல்நலமில்லையா?''
""ஒரு நாசமாய்ப்போன ஜலதோஷம்.''
""வெப்பம் இருக்கிறதே?''
குளிர்ச்சியான கைவிரல்கள் நெற்றியில் பதிந்தன.
சிறிது முன்பு நரை விழுந்துவிட்ட தலைமுடிக்கு மத்தியில் நகர்ந்தன. தொடர்ந்து கீழ்நோக்கி இறங்கி, தோளில் ஓய்வெடுத்தன.
""அன்னாசிப்பழ ஜூஸ்?'' பையன் வந்து கேட்டான்.
""காபி போதும். அதுதான் நல்லது.'' அன்பானவள்.
சூடான காபி கிடைத்தது. மேலும் ஒரு "கூல்' சிகரெட்டை எடுத்து பற்றவைத்தவாறு மெதுவாக காபியை உறிஞ்சிப் பருகினான்.
""உடல் நலமில்லையென்றால் பிறகு எதற்கு வரவேண்டும்?'' அன்புடன் அவள் கேட்டாள். பதில் கூறவில்லை. கூறுவதற்கு எதுவுமே இல்லையே? சற்று புன்னகைக்க முயற்சித்தான்.
பத்தரை மணி.
வெளியே வந்தான். மரங்கள், கட்டடங்கள், விளக்கு மரங்கள்... அனைத்தையும் மூடுபனி மூடிவிட்டிருந்தது. பாவத்திற்கான விஷத்தைப்போல, ஆளரவம் எதுவுமற்ற சாலையில் குளிர் நிறைந்திருந்தது.
பேருந்து நிறுத்தத்தில் போய் நின்றான். இறுதிப் பேருந்தோ... ஏதாவது ஒரு இரு இருக்கை வாகனமோ கிடைத்தால் அதிர்ஷ்டம்!
நிமிடங்கள் கடந்து சென்றன. காலியாகக் கிடந்த சாலையைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான். பேருந்து வரவில்லை. எந்தவொரு வாடகைக் காரும் கடந்து செல்லவில்லை.
""தப்பித்துச் செல்லப் பார்க்கிறீர்களா?''
ஒரு கனமான கை தோளில் விழுந்தது. சிங்காரா ஸிங்.
""உடல்நலமில்லை... சர்தார்ஜி''
""உடல்நலக்கேட்டை நான் சரிசெய்கிறேன்... வா.''
ஆட்கள் இல்லாத சாலையின்வழியாக சிங்காரா ஸிங்கைப் பின்பற்றி நடந்தான். எதுவும் பேசவில்லை. நாசமாய்ப் போகட்டும். முழுமையாக நனைந்தாகி விட்டது... இனி குளிப்பதற்கு எதற்குத் தயங்க வேண்டும்?
மேலே செல்லும் படிகளுக்குக் கீழேயிருந்த "குதாம்'தான் சர்தார்ஜியின் கடை. எப்போதும்போல சிதிலமடைந்த பனிப்பெட்டியின்மீது அமர்ந்தான். புட்டியையும் கண்ணாடிக் குவளையையும் வெளியே எடுத்து வைப்பதற்கு மத்தியில் அவன் கேட்டான்:
""உன் மனைவியும் குழந்தைகளும் நலமாக
இருக்கிறார்களா?''
""ஆமாம்.''
""பில்க்குல்?''
"பில்க்குல் டீக் ஹை...''
நிறைந்த கண்ணாடிக் குவளை முன்னால்... சந்தேகமில்லை. ஒரே நிமிடத்தில் குவளை காலியானது.
விழுங்கினான்.
பணிவான வேலைக்காரனைப்போல சர்தார்ஜி குவளையை நிறைத்துத் தந்தான். குளிரை நீக்கினான். களைப்பு விலகியது. வெப்பம் உண்டாக ஆரம்பித்தது. அமோனியாவும் ஆயிரங்கால் பூச்சியும்...
""போதும்.''
""இவ்வளவு சீக்கிரமா? தமாஷ் பண்ணுகிறீர்களா பாய் ஸாப்?''
""போதும் சிங்காரா ஸிங்... முடியாது.''
""போதாது.''
அவன் மீண்டும் புட்டியின் மூடியைக் கடித்துக் கழற்றினான். அவன் கையில் சிக்கினால் தப்பிக்க முடியாது. நாசமாய்ப் போயே தீரவேண்டும்.
மேலும் ஒரு குவளையை விழுங்கினான். அத்துடன் எதுவுமே செய்ய முடியவில்லை.
""நான் போகட்டுமா, சர்தார்ஜி?''
""எங்கு போகிறீர்கள்? இறுதிப் பேருந்து போய்விட்டது.''
""வாடகைக் கார் கிடைக்கும்.''
""இந்த நள்ளிரவு வேளையிலா? என் அறையில் இருந்து கொள்ளுங்கள். காலையில் எழுந்து பேசுலாம்.''
""வேண்டாம்... நன்றி.''
பனிப்பெட்டியின் மீதிருந்து எழுந்தான். அவிழ்ந்துவிட்ட ஷு கயிறைக் கட்டுவதற்கு முயற்சித்தான். முடியவில்லை. சிங்காரா ஸிங் கட்டிவிட்டான்.
""குட் நைட்.''
""குட் நைட்.''
சரீரம் மேலும் வெப்பமானது. தான் மிகவும் கேடுகெட்ட ஒரு மனிதன் என்று அவனுக்குத் தோன்றியது. உஷாவைப்போன்ற பலவீனங்களுக்கு இப்போது இடமில்லை. உஷா, பேபி, சுமா...
ஓசையோ அசைவோ... எதுவுமற்ற சாலை. மெல்லிய குளிர்ச்சி. மெல்லிய வெளிச்சம்... குளிர்ச்சியையும் வெளிச்சத்தையும்போல கனமும் உருவமற்ற தன்மையும் கொண்ட ஒரு தோற்றம்தான் தான் என்று அவன் நினைத்தான்.
மகா புனிதர்களில் மகா புனிதனாகவும், நல்லவர்களில் நல்லவனுமாகவும் வாழ்வதற்கு மிகுந்த விருப்பம் இருந்தது. எனினும், எதற்காக இப்படி ஆகிவிடுகிறான்? இந்த வீழ்ச்சிக்கு யார் பொறுப்பு? குரூரத்தன்மையும் வெறுப்பும் நிறைந்த அவனுடைய மனம்தான்.
ஆனால், இந்த மனதைப் படைத்ததும் வளர்த்ததும் அவனல்ல என்பது உண்மை. அதுமட்டுமல்ல- கெட்ட தூண்டுதல்களுக்குக் கீழ்ப்படிவதற்குமுன்பு ஒவ்வொருமுறையும் இந்த மனதுடன் அவன் போர் செய்வதுண்டு. இந்த வீழ்ச்சிக்குப் பொறுப்பு அவனல்ல என்பது உண்மை.
குளிர்ச்சியான காற்று பட்டு, வறண்டுபோய்க் காணப்பட்ட உதடுகளில் மெதுவாக ஒரு புன்சிரிப்பு உண்டானது. கையற்ற நிலையையும், கவலையையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரு மெல்லிய சிரிப்பு...
ஒவ்வொரு நிமிடமும் சோர்வடையக்கூடிய கால்களை முன்னோக்கி வைத்து வேகமாக நடப்பதற்கு முயற்சித்தான். நான்கு கிலோமீட்டர் தூரத்தில் வீடு இருக்கிறது. அதை அடைவானா?
________________
மொழிபெயர்ப்பாளரின் உரை
வணக்கம்.
இந்தமாத "இனிய உதய'த்திற்காக நான்கு அருமையான மலையாளச் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன்.
"மிஸஸ் டாலிபோத்தனின் மரணம்' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருது பெற்றவரும், மலையாள நவீன இலக்கியத்தின் துருவ நட்சத்திரமுமான எம். முகுந்தன். மாறுபட்ட கருக்களைக்கொண்டு கதைகள் எழுதுவதில் மன்னர் அவர்.
டாலி போத்தன் என்ற பெண்ணின் மரணத்தையும், அதை துப்புதுலக்குவதற்காகச் செல்லும் துப்பறிவாளர் ஹர்ஷராஜை யும் மையமாக வைத்து எழுதியிருக்கிறார். "கொலை செய்தது யார்?' என்று ஹர்ஷராஜ் கூறும்போது, உண்மையிலேயே நமக்கு ஆச்சரியம்தான் உண்டாகிறது. "அந்தப் பெண்ணைக் கொலை செய்தவர் இவர்தானா?' என்று நம் உதடுகள் நிச்சயம் உச்சரிக்கும். இப்படியொரு புதுமைக்கதையை எழுதிய முகுந்தனுக்கு ஒரு பூச்செண்டு!
"மூன்றாவது உலகப்போர்' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருது பெற்றவரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான ஒ.வி. விஜயன். அரசியல் பின்னணி கொண்டு கதைகளை எழுதுவதில் அரசர் அவர். வித்தியாசமான கண்ணோட்டத்துடன் இந்த கதையை எழுதியிருக்கிறார். "இப்படியும்கூட எழுத முடியுமா?' என்ற வியப்புதான் இதை வாசிக்கும்போது நமக்கு உண்டாகிறது.
"என் சோனி வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டியும் ஏதோ ஒரு தாய் கொண்டுவந்த பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்களும்' என்ற நீளமான தலைப்பைக்கொண்ட கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற மூத்த எழுத்தாளரான டி. பத்மநாபன். தனக்கென ஒரு வேறுபட்ட சிந்தனையையும், கதை எழுதும் அபார ஆற்றலையும் கொண்டவர் பத்மநாபன். அமெரிக்காவிலிருந்து சோனி தொலைக்காட்சிப்பெட்டி கொண்டு வரப்படும் செயல் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, பழைய ஆடைகளையும் தன் குழந்தைகளுக்காக பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்களையும் ஏதோவொரு வளைகுடா நாட்டிலிருந்து ஆசை ஆசையாகக் கொண்டுவரும் ஒரு தாயின் கண்ணீர்க் கதை இன்னொரு பக்கம் நடந்துகொண்டிருக்க... கதையை வாசித்து முடிக்கும்போது, நம் கண்களில் நிச்சயம் கண்ணீர் அரும்பும். மனதில் இனம்புரியாத சோகம் வந்து ஆட்கொள்ளும்.
"பத்தினிப் பெண்' கதையை எழுதியவர் சாகித்ய அகாடமி விருது பெற்ற மலையாளப் பெண் எழுத்தாளர்களின் நட்சத்திர மான மாதவிக்குட்டி. கணவரின் பணி உயர்விற்காக தன் சரீரத்தையே விலையாகக் கொடுக்கும் ஒரு பெண்ணின் கதை...
அவளின் தியாகச் செயலின் மூலம் கிடைக்கும் பணி உயர்விற்காக சந்தோஷத்தில் திளைக்கும் அவளின் கணவன்! யாரும் எழுதத் தயங்கும் கருவை வைத்து, உயிரோட்டமான ஒரு கதையை எழுதிய மாதவிக்குட்டியை நிச்சயம் நாம் பாராட்ட வேண்டும்.
இந்த நான்கு கதைகளையும் நான் மிகுந்த ஈடுபாட்டுடன் மொழிபெயர்த்திருக்கிறேன். இவை உங்களுக்குப் புதுமையான இலக்கிய அனுபவங்களை நிச்சயம் கொடுக்கும்.
மீண்டும் சந்திப்போம்.
"இனிய உதயம்' வெளியிடும் என் மொழிபெயர்ப்புப் படைப்புகளை ஆர்வத்துடன் வாசித்துவரும் உயர்ந்த உள்ளங்களுக்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா